பாரீஸ்:பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், கொள்ளை முயற்சியில் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26). இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் எந்திர பொறியியல் படித்து பட்டம் பெற்றுவிட்டு, அங்கேயே என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் இவர் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக பாரீஸ் பதினைந்தில் உள்ள 12ம் எண் மெட்ரோவில் உள்ள வாகிரார்டு மெட்ரோ நிலையத்தில் வந்திறங்கினார்.
அப்போது அவர் அந்த மெட்ரோ நிலையத்துக்கு வெளியே நெஞ்சிலும், கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் அப்படியே நண்பரின் வீட்டுக்கு சென்று அழைப்பு மணியை ஒலித்து விட்டு, அங்கு சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.இதுதொடர்பாக பாரீஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், கொலையாளியை தேடியும் வருகிறார்கள்.கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. யாரேனும் திட்டமிட்டு கொன்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment