ஐசிசியின் இரட்டை விருது வென்ற இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் நன்றி மறந்து விட்டதாக டோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர். இந்தாண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் அணி வீரர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இரட்டை விருதுகளை அஷ்வின் வென்றார். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனாலும், கேப்டன் டோனி ரசிகர்கள் சிலர் மட்டும் அஷ்வின் மீது கடுப்பில் உள்ளனர்.
அதற்கு காரணம், அஷ்வின் தன்னை வளர்த்து விட்ட டோனிக்கு நன்றி சொல்லவில்லை என்பதுதானாம். விருது வென்றது குறித்து அஷ்வின் அளித்த பேட்டியில், ‘இந்த விருதை எனது குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன். ஐசிசிக்கும், குறிப்பாக எனது சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். டோனி ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடங்களை தாண்டி இளம் கேப்டனான கோஹ்லி தலைமையில் வலுவான அணியாக உருவெடுத்துள்ளோம். இந்திய அணி இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது’ என்றார்.
இதுதான் டோனி ரசிகர்களின் கோபம். கேப்டனாக டோனியின் தலைமையின் கீழ்தான் அஷ்வின் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி தலைமையின் கீழ் தான் அஷ்வின் விளையாடினார். அஷ்வினுக்கு டோனி அதிகளவில் ஆதரவளித்தாக கூறும் ரசிகர்கள், அஷ்வின் தன்னை வளர்த்து விட்ட டோனியை பெருமைப்படுத்தும் வகையில் ஒருவார்த்தை கூட கூறவில்லையே என சோகமாகி உள்ளனர்.
இது தொடர்பாக டிவிட்டரில், ‘பழச நினைச்சு பாருங்க’, ‘உங்கள் வெற்றிப்பாதையில் டோனியின் பங்களிப்பை மறந்து விட்டீர்களா’, ‘உங்களிடமிருந்து இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை’ என டோனி ரசிகர்கள் மட்டுமின்றி, அஷ்வின் ரசிகர்கள் என கூறிக் கொள்ளும் சிலரும் கூட டிவிட்டரில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment