Friday, 6 January 2017

தோனியின் முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும்: அஸ்வின்







சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வின், தோனி கேப்டன்சி முடிவு குறித்த கேள்விக்கு, அது அவரது தனிப்பட்ட விஷயம், முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னை, ஜன.06 (டி.என்.எஸ்) இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சென்னையைச் சேர்ந்த அஸ்வின், தனது இளம் வயதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதோடு, ’ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்’ என்ற பட்டத்தை வென்ற முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தற்போது ஐ.டி.டபிள்யு (ITW)-ன் திறமை மேலாண்மை பிரிவான ஐ.டி.டபிள்யு (ITW) பிளிட்ஸுடன் இணைந்துள்ளார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற அஸ்வின் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேப்டன் பதவியில் இருந்து டோனி, விலகியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின், கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது அவரது தனிப்பட்ட விஷயம். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும், அதை விவாதிக்க கூடாது, என்று பதிலளித்தவர், டோனியைப் போல ஒரு வீரர் நமக்கு கிடைப்பாரா? என்ற கேள்விக்கு, தோனி அவரது திறமையின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தியது போல, வேறு சில வீரர்களும் கண்டிப்பாக சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள்.
இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த கேப்டன் தோனி என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரது காலத்தில் தான் பல திறமையான இளைஞர்களுக்கு அணியில் இடம் கிடைத்தது. அதில் ஒருவராகத்தான் தற்போதைய கேப்டன் விராட் கோலியும் இடம் பிடித்தார். தோனியைப் போல அணியை வழி நடத்த நிச்சயம் சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுக் கொண்டு தான் இருப்பார்கள், என்றார்.
பலர் கிரிக்கெட் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நீங்கள், ரசிகர்களின் கேள்விக்கு ரொம்ப குறும்பாக பதில் சொல்வது எப்படி? என்ற கேள்விக்கு, நான் ரொம்பவே ஜாலியான ஆள். எல்லோரிடமும் ஜாலியாக பேசுவது தான் எனது இயல்பு, யாராவது என்னிடம் கேள்விக் கேட்டால் கூட நான் நக்கலாக தான் பதில் சொல்வேன். அந்த அளவுக்கு நான் குசும்புத்தனம் பிடித்தவன்.
இதற்கு காரணம் சினிமா தான். சிறு வயதில் இருந்தே அதிக திரைப்படங்கள் பார்ப்பேன். சினிமா எனது வாழ்க்கையில் முக்கியமானது, அதனால் தான் சமூக வலைதளங்களில் பலரது கருத்துக்கு நான் கிண்டலாக பதில் சொல்கிறேன். மீடியாக்களிடம் ஒரு மாதிரியாக பேசுவதும், பர்சனல் வாழ்வில் ஒரு மாதிரி பேசுவது, என்று என்னால் பிரித்துப் பார்க்க முடியாது. எந்த இடமாக இருந்தாலும் நான் ஒரே மாதிரியாகத் தான் பேசுவேன். காமெடி சேனல்கள் பார்ப்பதும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்., என்று பதில் அளித்தார்.

No comments:

Post a Comment