கடன் அட்டைகள் நான்கை அடுக்கியது போன்ற தடிமன்; ஸ்மார்ட்போன் மின்கலனைப் போன்ற தோற்றம்; ஆனால் உள்ளே அபார திறன் கொண்ட, 'இன்டெல்'லின், 'கம்ப்யூட் கார்டு' சி.இ.எஸ்.,ல் பலரைக் கவர்ந்தது. நினைவகம், தகவல் அலசும் புராசசர், வை - பை ரேடியோ போன்றவற்றை அடக்கியது. விசைப் பலகையையும், திரையையும் இணைத்தால், இது ஒரு முழு கணினி தான். இதை, சிலிக்கன் சில்லை தயாரிக்கும் நிறுவனம் படைத்திருப்பது, பலரை வாய் பிளக்க வைத்திருக்கிறது. திற மூல கணினி உலகில் பிரபலமான, 'ராஸ்ப்பெர்ரி பை' கணினி புராசசர்களுக்கு போட்டியாக வந்துள்ள, 'இன்டெல்'லின் இந்த படைப்பை, வீடு மற்றும் அலுவலக சாதனங்களுடன் இணைத்து அவற்றை, 'புத்திசாலி' இயந்திரங்களாக மேம்படுத்த முடியும். ஏற்கனவே நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பாளரான, 'ஷார்ப்' இந்த அட்டைக் கணினியை பயன்படுத்த இருக்கிறது. மேலும் பல கணினி மற்றும் மின்னணு சாதன தயாரிப்பாளர்கள், 'இன்டெல்'லின் இந்த குட்டி ஜீனியசை தங்கள் சாதனத்துடன் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். மேசைக் கணினி, மடிக் கணினி, பலகைக் கணினி ஆகியவற்றுக்கு அடுத்து, அட்டைக் கணினி ரகத்திற்கு இன்டெல் அச்சாரம் போட்டிருக்கிறது!
No comments:
Post a Comment