மெரினாவில் மெர்சல் கட்டும் இளைஞர் சுனாமி
மெரினாவில் காலைமுதல் திரண்டிருக்கும் இளைஞர் சுனாமியால் தமிழக அரசு கதிகலங்கி கிடக்கிறது. போலீசார் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மெரினா காமராஜர் சாலை ஒருவழிப்பாதை ஆனது.
கடந்த சனிக்கிழமை அவனியாபுரத்தில் வைக்கப்பட்ட சிறு பொறி பாளமேட்டில் நெருப்பாகி , அடங்கா நல்லூரில் எரிய ஆரம்பித்து இன்று தமிழகம் முழுதும் போராட்ட தீ பெரும் ஜுவாலையாக கொழுந்து விட்டு எரிகிறது.
சென்னை மெரினா , கோவை கொடீஷியா மைதானத்தில் பத்தாயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் இறுதிவரை கலையாமல் உள்ளனர். காமராஜர் சாலையே புதுவருடப்பிறப்பு அன்று இருப்பது போல் புத்தாண்டு கொண்டாட்டம் போல் இளைஞர்களால் சூழப்பட்டுள்ளது.
தங்கள் போராட்டத்தை கைவிடாத இளைஞர்களால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் ஓபிஎஸ் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டம் சூடு பிடிக்க பிடிக்க கலையுலகின் முக்கிய நடிகர்கள் எல்லோரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் அரசு தரப்பில் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு மவுனமாக உள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டு, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் திரண்டு நிற்கிறது. ஒரு பதற்றமான சூழ்நிலை இரண்டு புறமும் நிலவி வருகிறது.
போலீசாராஇ விட இளைஞர்கள் எண்ணிக்கை நேரம் செல்ல செல்ல கூடி நள்ளிரவில் பத்தாயிரக்கணக்கில் உள்ளதால் தடியடியோ , அல்லது கண்ணீர் புகை குண்டு வீசியோ கலைக்க வாய்ப்பில்லை.
பலப்பிரயோகம் செய்தால் அது கடுமையான எதிர் விளைவை உண்டுபண்ண வாய்ப்புள்ளதால் போலீசார் தயக்கத்தில் உள்ளனர்.
போராட்டம் முடிவுக்கு வராவிட்டால் நாளை பள்ளி , கல்லூரிகள் மாணவர்கள் கூடுதலாக குவிய வாய்ப்பு உள்ளது. டைடல் பார்க் இளைஞர்களும் குவிய வாய்ப்பு உள்ளதால் பதற்றம் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.
கடலிலிருந்து சுனாமி கரைக்கு வந்தது போல் திரண்டுள்ள இளைஞர்களின் கூட்டத்தை பார்த்து சென்னை பாசையில் சொல்ல வேண்டுமானால் அரசு மெர்சலாகி போயுள்ளது என்றே கூறலாம்
No comments:
Post a Comment