ரயில்வே துறை சுற்றுச்சூழல் மாசுபாடுவதை குறைக்கும் வகையில் பசுமை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தெற்கு ரயில்வே சார்பில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட் பட்ட ரயில்களின் மேற்கூரையில் சூரியசக்தி தகடுகளை பொருத்தி மின்சாரம் தயாரித்து ரயில் பெட்டிகளுக்கு பயன்படுத்தும் சோதனை அடிப்படையிலான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சேலத்தைச் சேர்ந்த இந்த்- ஆஸி சோலார் நிறுவனம் ரயில் பெட்டிகளின் கூரை மீது சூரியசக்தி தகடுகளை பதிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதன்படி ரயில் பெட்டிகளில் சோலார் தகடு களை பதித்து தெற்கு ரயில்வே யிடம் ஒப்படைத்துள்ளது.
மேற்கூரையில் 36 சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்ட ரயில் பெட்டியை, சேலம்-மயிலாடுதுறை ரயிலில் இணைக்கும் விழா சின்னசேலம் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தலைமை வகித்தார். மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், முதன்மை தலைமை பொறியாளர் சேகர் சர்மா, இந்த் ஆஸி சோலார் (பி) லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கண்ணன், ஆராய்ச்சி மற்றும் திட்ட வளர்ச்சி இயக்குநர் பாலா பழனி, பொது மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில் பெட்டியில் உள்ள அனைத்து மின் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்கக்கூடிய வகையில், ரயில் பெட்டி மீது 16 சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் கிடைக்கும் மின்சாரத் தைக்கொண்டு மின் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் 4.8 கி.வாட் மின்சா ரத்தை தயாரிக்க முடியும்.
ஒரு ரயிலில் சூரியசக்தி தகடுகளை பொருத்தி மின்சாரம் தயாரிப்பதன் மூலம் ஓராண்டில் 20 முதல் 25 கிலோவாட் மின்சாரம் கிடைக்கும் என்பதால் மின்சார தயாரிப்புக்காக ஓராண்டுக்கு செலவாகும் 1,700 லிட்டர் டீசல் மிச்சமாகும். டீசல் பயன்பாடு குறைக்கப்படுவதால் 4,396 டன் கார்பன் மோனாக்சைடு காற்றில் கலப்பது தடுக்கப்படும். இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற ரயில் பெட்டி களிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்படும்” என்றனர்.
No comments:
Post a Comment