Sunday, 8 January 2017

டாடா விஞ்ஞானிகள் கண்டறிந்த 'மீகடத்தி'

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நான்கு விஞ்ஞானிகள், 'பிஸ்மத்' என்ற பொருள், 'சூப்பர் கண்டக்டர்' எனப்படும் மீகடத்தி திறன் கொண்டது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால், மருத்துவமனைகளில் நோயறிதலுக்கு பயன்படும், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் போன்றவற்றுக்கு ஆகும் செலவை வெகுவாக குறைக்கலாம் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். மின்சாரத்தை தங்கு தடையின்றி கடத்தும் திறன் கொண்ட பொருட்களை, மீகடத்தி என, விஞ்ஞானிகள் வகைப்படுத்தி உள்ளனர். மீகடத்திகளை கண்டறிந்ததற்காக, 1972ல் பர்டீன், கூப்பர் மற்றும் ஷ்ரிபெர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் அவர்கள் கூட, பிஸ்மத்திற்கு மீகடத்தித் திறன் இருப்பதாக கண்டறியவில்லை.
'பிஸ்மத் ஒரு மீகடத்தி என நிரூபிக்கப்பட்டிருப்பது, தனிம அட்டவணையில் மேலும் புதிய வகை மீகடத்திகள் இருக்க முடியும் என்பதையே காட்டுகிறது' என, ஆராய்ச்சிக் குழுவுக்கு தலைமை வகித்த, பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன், ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மீகடத்தித் திறன் இருப்பது கண்டறியப்பட்டாலும், நடைமுறையில் அவற்றை பயன்படுத்தும் வழிகளை உருவாக்க பல ஆண்டுகள் பிடிக்கும். உதாரணத்திற்கு, டென்மார்க்கை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமெர்லிங் ஓன்ஸ் என்பவர், பாதரசத்திற்கு மீகடத்தித் திறன் இருப்பதை, 1911லேயே கண்டுபிடித்தார். ஆனால், அதை வைத்து மீகடத்தியில் காந்தங்களை உருவாக்க, அரை நுாற்றாண்டுக்கு மேலானது. இன்று உலகம் முழுவதிலும், மின்சாரத்தை வினியோகிக்க கம்பி வடிவில் பயன்படுத்தப்படும் செம்பு ஒரு குறைகடத்தி. இதனால், மின்சாரம் செல்லும் வழியில், 30 சதவீதம் விரயமாகிறது. பிஸ்மத் போன்ற மீகடத்தியை பயன்படுத்தினால் அந்த விரயம் தடுக்கப்படும் என்று மின்னியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். எனவே டாடா நிலைய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப உலகிற்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி தான்.

No comments:

Post a Comment