Sunday, 8 January 2017

நீக்கப்படும் சூழ்நிலைகளில் தோனி பலமுறை என்னை காப்பாற்றி உள்ளார்: மனம் திறக்கும் விராட் கோலி

அணியில் இருந்து நீக்கப்படும் சூழ்நிலைகளில் கேப்டனாக தோனி பலமுறை தன்னை காப்பாற்றி உள்ளதாக இந்திய அணியின் புதிய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி தனது அறிமுக ஆட்டத்தையே தோனியின் தலைமையின் கீழ்தான் ஆரம்பித்திருந்தார். 2008-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி கேப்டனாக இருந்தபோது விராட் தொடக்க வீரராக களமிறங்கி 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் என இரண்டிலுமே விராட் கோலி ஆரம்பக்கட்டங்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். அணியில் அவரது இடத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவானது. ஆனால் தோனியோ, கோலியின் திறமை மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார்.
அவர் அளித்த ஆதரவை நன்கு பயன்படுத்திக் கொண்ட கோலி, தற்போது இந்திய அணியை அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார். இது தொடர்பாக கோலி கூறும்போது,
“எனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை வழி நடத்தி முழுமையான கிரிக்கெட் வீரராக உருவாக்கியவர் தோனி தான். என்னை அணியில் இருந்து நீக்காமல் பலமுறை கைகொடுத்து காப்பாற்றி உள்ளார். அவரின் இடத்தை பூர்த்தி செய்வது முடியாத காரியம். தோனி என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முதல் விஷயமே கேப்டன்தான். அதைதவிர தோனியை நீங்கள் எந்த விஷயத்துடனும் ஒப்பிட முடியாது. எனக்கு எப்போதுமே தோனிதான் கேப்டன்’’ என்றார்.
குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதை தொடர்ந்து, தேர்வுக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக விராட் கோலியை அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுத் தனர்.
டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை திறம்பட வழிநடத்தி வரும் கோலி தனது முதல் சவாலாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டி 20 தொடர்களை சந்திக்க உள்ளார். முதல் ஒருநாள் போட்டி வரும் 15-ம் தேதி புனேவில் நடைபெறுகிறது

No comments:

Post a Comment