'பள்ளிக் குழந்தைகள் பாக்கெட்டில் பென்சில் இருப்பது போல, ஒரு நுண்ணோக்கியும் இருக்கும்படி செய்ய வேண்டும்' என்கிறார் மனு பிரகாஷ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரி விஞ்ஞானியாக இருக்கிறார். இவரும், இவரிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவர் ஒருவரும் சேர்ந்து, 2010ல், 'போல்ட் ஸ்கோப்' என்ற நுண்ணோக்கியை உருவாக்கினர். காகிதத்தை வெட்டி அழகாக ஒட்டும் ஜப்பானிய, 'ஓரிகமி' கலையின் உந்துதலில் உருவாக்கப்பட்டதுதான் போல்ட் ஸ்கோப். ஆம், இது கெட்டியான காகிதத்தை வெட்டி, எளிய லென்ஸ் ஒன்றையும் வைத்து தயாரிக்கப்பட்ட எளிய நுண்ணோக்கி. போல்ட் ஸ்கோப் நுண்ணோக்கி அட்டையை வாங்கி, எவரும் சில நிமிடங்களில் ஒரு நுண்ணோக்கியை உருவாக்க முடியும்; இதன் விலை, 66 ரூபாய். 'போல்ட் ஸ்கோப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்' என்ற நிறுவனத்தை மனு பிரகாஷ் துவங்கி, போல்ட் ஸ்கோப்களை உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அனுப்பினார்.மொத்தம் 50 ஆயிரம் பேர் இதை தங்கள் தேவைக்கேற்ப, நோய் கிருமிகள் ஆராய்ச்சி, பூச்சிகள், நுண்ணுயிரிகள் ஆராய்ச்சி, சிறிய உயிரினங்களை புகைப்படம் எடுப்பது போன்ற எதிர்பாராத முறைகளில் பயன்படுத்தி அசத்தியிருக்கின்றனர்.போல்ட் ஸ்கோப்பை பயன்படுத்துவோர் தங்கள் கண்டுபிடிப்புகளை பகிர, 'மைக்ரோ காஸ்மாஸ்' என்ற இணைய குழுமத்தை உருவாக்கியிருக்கிறார் பிரகாஷ். இதில், பல நாடுகளைச் சேர்ந்த பயனாளிகள் தினமும் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். 2017ல், உலகெங்கும், 10 லட்சம் பேருக்கு இதை வினியோகிக்க வேண்டும் என்பது பிரகாஷின் இலக்கு.இதற்காக கிக் ஸ்டார்டர் இணையதளத்தில், 35 லட்சம் ரூபாய் நிதி தேவை என்று ஆதரவு கேட்டிருந்தார் பிரகாஷ். ஆனால், இதுவரை, 2.67 கோடி ரூபாய்க்கு மேல் நிதி குவிந்து விட்டது!
No comments:
Post a Comment